தமிழ்நாடு மின்வெட்டு

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மின்வெட்டு தொடர்வதற்கும் அதிகரிப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. எதிர்கால மின்தேவையை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்படவில்லை. பராமரிப்பு, விநியோகத்தில் மின்வாரிய அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. புதிய மின்னுற்பத்திக்கான இடங்களையும் வழிமுறைகளையும் அடையாளம் காண மாநிலத்தில் தனி ஆராய்ச்சிப்பிரிவு ஏதும் இல்லை. மின் சிக்கனம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி வருகிறோம்.
 மின்வெட்டு அதிகமாக இருக்கும் இக்காலத்திலும் தெரு விளக்குகளை காலையில் வெளிச்சம் நன்கு ஏற்பட்ட ஒரு மணி நேரம் கழித்தபிறகு கூட அணைக்காமல் விரயம் செய்கின்றனர். அதிக மின்சாரத்தை இழுத்து ஒளியைத் தரும் சோடியம் ஆவி விளக்குகள், மெர்க்குரி விளக்குகள், ஹாலோஜன் விளக்குகள் இன்னமும் பயன்பாட்டில் உள்ளன.
 இவற்றை மாற்றி, குறைந்த மின்சாரத்தில் அதிக ஒளிதரக்கூடிய எல்.இ.டி., பவர் சேவர் சி.எஃப்.எல். விளக்குகளைப் பொருத்தலாம். சூரிய சக்தியில் ஒளிதரும் சோலார் லேம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதனால் 500 மெகாவாட் மின்சாரம் மிச்சப்படும்.
 சமையல் கேஸ் சப்ளையை மத்திய அரசு குறைத்துவருவதால் எல்லோரும் மின்சாரத்தில் செயல்படும் "இன்டக்ஷன் ஸ்டவ்' எனப்படும் மின்சார அடுப்பை வாங்கத் தொடங்கிவிட்டார்கள். இதன் விலை குறைவாக இருப்பதால் எளிதாக வாங்கமுடிகிறது. இது அதிக மின்சாரத்தை இழுத்து செயல்படும் தன்மையுள்ளது. இன்டக்ஷன் அடுப்புகளுக்கு மாநில அரசு உடனடியாக தடை விதிப்பது நல்லது. இல்லையேல் மின்தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். இன்டக்ஷன் அடுப்புகள் 200 வாட் முதல் 2000 வாட் வரை மின்திறன் உள்ளது.
 பெரும்பாலான வீடுகளில் பயன்பாட்டில் உள்ள டியூப் லைட்டுகளில் "கால் டைப்' சோக் பயன்படுத்தப்படுகிறது. இதற்கும் அதிக மின்சாரம் தேவை. டியூப் லைட்டுகளுக்கு "எலக்ட்ரானிக்' சோக்குகளைப் பயன்படுத்தினால் மின்சாரத்தைச் சேமிக்கலாம். குறைவழுத்தத்திலும் டியூப்லைட்டுகள் எரிவது கூடுதல் அனுகூலமாகும்.
 இப்போதே பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில்கூட ஏர்-கன்டிஷனர், பிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர், எலக்ட்ரிக் ஓவன், மிக்ஸி, கிரைண்டர், வாக்குவம் கிளீனர், டி.வி. டெக், இன்டெர்நெட் இணைப்பு, ஹேர் டிரையர் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் தயாரிக்கப்படுபவை. இவை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும்.
 சூரிய ஒளியைப் பயன்படுத்தி இயங்கும் அடுப்பு, விளக்கு, விசிறி (ஃபேன்) ஆகியவற்றை 3 மாத காலத்துக்குள் வழங்குவதன் மூலம் இப்போது செலவிடப்படும் மின்சாரத்தில் 20 சதவீதத்தைக் குறைக்கலாம். இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளுக்குப் பதிலாக சூரிய சக்தியில் செயல்படும் சாதனங்களை அளிக்கலாம்.
சூரிய ஒளியில் இயங்கும் 3 விளக்குகள், ஒரு பேன், ஒரு அடுப்பு அமைக்க ஒவ்வொரு வீட்டுக்கும்  சுமார் 15,000 ரூபாய்தான் தேவைப்படும். அடுப்பை நீக்கிவிட்டுப் பார்த்தால் செலவு ரூ.7,000 மட்டுமே.
 மின் சிக்கனம்பற்றி பொதுமக்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் - திருமணக் கூடங்கள் போன்ற பொதுப்பயன்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்துவதும் கண்காணிப்பதும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
 தென் தமிழகத்தில் பரந்துவிரிந்துகிடக்கும் நிலப்பரப்பில் கருவேல மரங்கள் கரிமூட்டம் செய்யப்பட்டு வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றது. இது முழுமையான தொழிலாக நடக்கவில்லை. திருப்பூர் போன்ற நகரங்களில் கரியைப் பயன்படுத்தி நீராவி தயாரித்து அதன் சக்தியில் சாயப்பட்டறைகள் இயக்கப்படுகின்றன. ஹோட்டல், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகளுக்கும் இந்த நீராவிச் சக்தி பயன்படுகிறது. இதில் பெரிய டர்பைன்களையும் பாய்லர்களையும் பயன்படுத்தினால் உற்பத்தியும் அதிகரிக்கும்; கிராம மக்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
 அரசு இப்போது அறிவித்துள்ள சூரிய சக்தி மின்சாரத் தயாரிப்பை முழுமையாகச் செயல்படுத்த 3 ஆண்டுகள் தேவையில்லை, 6 மாதங்கள் முதல் 18 மாதங்களே போதும்.
 பெரிய நகரங்களில் ஜவுளிக்கடை, நகைக்கடை போன்றவற்றின் விளம்பர போர்டில் 2000 வாட் திறன் உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைபோன்ற பயன்பாட்டுக்கு சூரிய ஒளி அல்லது ஜெனரேட்டர் மின்சாரத்தைப் பயன்படுத்தச் சொல்ல வேண்டும்.
 சூரிய ஒளி மின்சக்தி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட "எல். அண்ட் டி' போன்ற அனுபவம் வாய்ந்த இந்தியத் தொழில் நிறுவனங்களை இணைத்து அவற்றின் மேற்பார்வை, ஆலோசனையின்பேரில் செயல்படுவது நல்ல பலனைத் தரும். அமைச்சர், மின் வாரியத்துறை அதிகாரிகளை மட்டும் கொண்ட குழுவால் மட்டும் இத்திட்டம் வெற்றியடையாது.இனிமேல் தமிழகம் இருண்டுகிடக்கும் ;;;;;;'''',,

Comments

Popular posts from this blog

நானும் வந்துட்டேன் பதிவுலகத்திற்கு

வரலாறு சிறப்பு